NATIONAL

துப்பாக்கியைக் கையாள்வதில் அலட்சியம்- பாதுகாவலர் கைது

அலோர்ஸ்டார், ஆக. 9 – துப்பாக்கியை அலட்சியமாகக் கையாண்டதன்
காரணமாக அந்த சுடும் ஆயுதத்திலிருந்து ஒரு தோட்டா தற்செயலாக
வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாவலர் நிறுவனம் ஒன்றைச்
சேர்ந்த பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஐம்பதாறு வயதான அந்த பாதுகாவலர் நேற்று மாலை 5.30 மணியளவில்
இங்குள்ள அலோர்ஸ்டார் மருத்துவமனையின் வருவாய்ப் பிரிவு
அலுவலகத்தில் பணியில் இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக
அலோர்ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்ஹாரி அபு சமா
கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் அந்த பாதுகாவலர் நிறுவனத்தின் செயல்பாட்டு
அதிகாரியிடமிருந்து நேற்று மாலை 6.20 மணியளவில் புகார்
கிடைத்ததைத் தொடர்ந்து அவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக அவர்
சொன்னார்.

சம்பவத்தின் போது அந்த பாதுகாவலர் நிறுவனம் வழங்கியிருந்த
வின்செஸ்டர் என்ற அந்த துப்பாக்கி பாதுகாப்பு விசை திறக்கப்பட்ட
நிலையில் மேசை மீது வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

அச்சமயம் அருகில் நின்றிருந்த பாதுகாவலர் எதேச்சையாக நகர, அவரது
தொடைப் பகுதி துப்பாக்கியின் பின்பக்கத்தில் மோதி துப்பாக்கி கீழே
விழுந்துள்ளது. அதன் விளைவாக துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா
வெடித்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பொது இடத்தில் துப்பாக்கி வேட்டு கிளப்பியதற்காக 1960ஆம் ஆண்டு
ஆயுதச் சட்டத்தின் 39வது பிரிவின் கீழ் அந்த பாதுகாவலருக்கு எதிராக
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில்
கூறினார்.

கடந்த ஈராண்டுகளாகப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வரும் அந்த
ஆடவருக்கு கடந்தாண்டில்தான் துப்பாக்கியை கையாள்வதற்கான
லைசென்ஸ் கிடைத்ததாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :