ANTARABANGSA

ஜப்பானில் பெரும் பூகம்பம் ஏற்படும் அபாயம்-  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தோக்கியோ, ஆக. 9 – நேற்று மியாசாகியை உலுக்கிய ரிக்டரில் 7.1 என்ற  அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து  ஒகினாவா பகுதி முதல் இபராக்கி வரையிலான  நாட்டின் தென் பகுதியில் உள்ள 29 மாநிலங்களை உள்ளடக்கிய  707 மாவட்டங்களில்  பெரும் பூகம்ப எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடல் வட்டாரத்தில்  அமைந்திருக்கும்  இப்பகுதி பெரும் நிலநடுக்க வரலாற்றைக்  கொண்டுள்ளது என்று அது கூறியது. இப்போது (அப்பகுதியில்) நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

ஆனால், எப்போது, எங்கு நடக்கும் என்று எங்களால் சரியாகச் சொல்ல முடியாது. ஆயினும் மக்கள் தங்கள் தயார் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அந்த  ஆய்வு மையத்தின்  தலைவர் நவோஷி ஹிராத்தா கூறியதாக  தி அசாஹி ஷிம்புன் பத்திரிகை  தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள அடுத்த வாரம் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அம்மையம் எச்சரித்தது.

நேற்று மியாசாகி பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 4.42 மணிக்கு (மலேசிய நேரம் 3.42 மணிக்கு) ஏற்பட்ட நிலநடுக்கம்   ஹியுகா கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும்  30 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் நிபுணர்களின் சிறப்புக் கூட்டத்தை நடத்தியப் பின்னர் இரண்டாம் நிலை பெரிய பூகம்ப எச்சரிக்கையை வெளியிட்டது.

கடந்த  2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எச்சரிக்கை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வெளியிடப்பட்ட முதல் எச்சரிக்கை இதுவாகும். அடுத்த 30 ஆண்டுகளில் இதே பகுதியில் 8 முதல் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் முன்னரே கணித்துள்ளனர்.


Pengarang :