ANTARABANGSA

அகதிகள் தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்- சுமார் 100 பேர் பலி

கெய்ரோ, ஆக. 11- போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் அகதிகளாக அடைக்கலம் நாடி இருந்த பள்ளி வளாகம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் சுமார் 100  பேர் கொல்லப்பட்டதாக காஸாவிலுள்ள சிவில் அவசரச் சேவைப் பிரிவு நேற்று கூறியது.

எனினும், காஸா நகரில் நிகழ்ந்த இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகப்படுத்தப் பட்டுள்ளதாகவும் இதில் கொல்லப்பட்டவர்களில்  19 தீவிரவாதிகளும் அடங்குவர் என்றும் இஸ்ரேல் கூறியது.

கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் இறந்தவர்களின் உடல்கள் சிதறி கிடப்பதையும் உடல்கள் அகற்றப்படுவது மற்றும் போர்வையால் மூடப்பட்டுள்ளதை யும்  சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகள் சித்தரிக்கின்றன.

தபீன் பள்ளி வளாகத்தில் பெரும் எண்ணிக்கையிலான உடல்களுக்கு அருகே மக்கள் பிரார்த்தனை செய்வதை மற்றொரு காணொளியில் இடம் பெற்றுள்ள காட்சிகள் சித்தரிக்கின்றன.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள், துருக்கி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள வேளையில் அமெரிக்க இது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

பத்து மாதங்களாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் சக நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும் ஒரு தாக்குதலில் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று துணையதிபர் கமலா ஹாரிஸ் கூறினார். அரிசோனா, பீனிக்ஸ் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா, நாஸா நகர் மீதான தாக்குதல் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

அகதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தலைமையிலான அரசாங்கத்தின் ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

பதினோறு சிறார்கள், ஆறு பெண்கள் உள்பட 93 தியாகிகளை நாம் இழந்துள்ளோம். அடையாளம் தெரியாத உடல்கள் இன்னும் காணப்படுகின்றன என்று பாலஸ்தீன சிவில் தற்காப்புத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


Pengarang :