NATIONAL

தாமான் ஸ்ரீ மூடாவில் வெ.10 கோடி செலவில் வெள்ளத் தடுப்பு திட்டம்- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தகவல்

செய்தி. ஆர்.ராஜா ஷா ஆலம், ஆக. 12- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் பத்து கோடி வெள்ளி செலவில் முழுமையான வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தெரிவித்தார்.

எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு குத்தகை நிறுவனம் நியமிக்கப்பட்டு விட்டது அவர் குறிப்பிட்டார்.

தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வினை காணும் நோக்கிலான இத்திட்டத்தை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம்  வெள்ளத்திற்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதற்கான செயல்முறையை உருவாக்கும் பணியில் தற்போது  ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

ஸ்ரீ மூடாவை ஒட்டியுள்ள கிள்ளான் ஆற்றின் கரைகளை உயர்த்துவது, நீர் சேகரிப்பு குளங்களை அமைப்பது, கால்வாய்களை மேம்படுத்துவது போன்ற பணிகளை இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் உள்ளடக்கியிருக்கும். இதன் மூலம் இந்த குடியிருப்பு பகுதியில் வெள்ளப் பிரச்சினைக்கு முழுமையான மற்றும் நிரந்தரமான தீர்வு காணப்படும் என அவர் சொன்னார்.

மத்திய அரசின் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் ஒருபுறமிருக்க மாநில அரசு வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வாயிலாக பல்வேறு வெள்ளத் தடுப்புப் பணிகளை ஸ்ரீ மூடா பகுதியில் மேற்கொண்டு வருவதாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.

இப்பகுதியில் ஏற்கனவே மூன்று நீர் இறைப்பு இயந்திரங்கள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக மேலும் மூன்று அதிநவீன நீர் இறைப்பு இயந்திரங்கள் 70 லட்சம் வெள்ளியில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு விநாடிக்கு 5,000 கன மீட்டர் நீரை உறிஞ்சி ஆற்றில் வெளியேற்றும் ஆற்றலை  இந்த புதிய இயந்திரங்கள் கொண்டுள்ளன என்று இன்று தமது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

அதோடு மட்டுமின்றி இக்குடியிருப்பு பகுதியில் சீரான நீரோட்டத்தை உறுதி செய்ய கால்வாய்கள் தரம் உயர்த்துவது மற்றும் கூடுதலாக நீர் இறைப்பு இயந்திரங்களை பொருத்துவதற்கு  ஷா ஆலம் மாநகர் மன்றம் 50 முதல் 60 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் அவர்.

தாமான் ஸ்ரீமூடாவில் வெள்ளப் பிரச்சினைக்கு முழுமையாகத் தீர்வு காண்பதில் வட்டார குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பும் தங்களுக்கு மிகவும் தேவைப்படுவதாக கூறிய அவர், தங்களின் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும் அதேவேளையில் குப்பைகளை வடிகால்களில் வீசுவதை தவிர்க்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

மேலும், தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டில் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் கூட்டு துப்புரவு இயக்கங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :