NATIONAL

அலோர் காஜாவில் வெள்ளம்- 360 பேர் ஆறு நிவாரண மையங்களில் அடைக்கலம்

மலாக்கா, ஆக. 12- அலோர் காஜாவில் ஏற்பட்ட வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி
109 குடும்பங்களைச் சேர்ந்த 360 பேராக உயர்வு கண்டுள்ளது. நேற்றிரவு 48
குடும்பங்களைச் சேர்ந்த 248 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட அனைவரும் இம்மாவட்டத்திலுள்ள ஆறு துயர் துடைப்பு
மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைச்
செயல்குழுவின் தலைவர் கமாருள்ஷியா முஸ்லீம் கூறினார்.

பாலாய் ராயா பாயா லெபாரிலுள்ள துயர் துடைப்பு மையத்தில் 13
குடும்பங்களைச் சேர்ந்த 61 பேரும் மஸ்ஜிட் தானா பெர்க்கிம்
அலுவலகத்தில் உள்ள துயர் துடைப்பு மையத்தில் நான்கு
குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்
சொன்னார்.

மேலும், பாலாய் ராயா ஆயர் பாபாஸ் நிவாரண மையத்தில் எட்டு
குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரும் சுங்கை ஜெர்னே பள்ளியில்
செயல்படும் நிவாரண மையத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 15
பேரும் தங்கியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா இஸ்லாமிய சமய இலாகா தொடக்கப் பள்ளியில் 59
குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் அடைக்கலம் நாடியுள்ள வேளையில்
ஜெபுருன் கோல லிங்கியில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 95 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

பாலாய் ராயா கம்போங் ரமுவான் சீனா பெசாரில் செயல்பட்டு வந்த
நிவாரண மையம் நேற்றிரவு 9.00 மணிக்கு மூடப்பட்டதாக இன்று இங்கு
வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டார்.

நேற்று பெய்த கனத்த மழையின் காரணமாக அலோர் காஜா
மாவட்டத்திலுள்ள 21 இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்றார் அவர்.


Pengarang :