NATIONAL

நெங்கிரி இடைத்தேர்தலை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அஜிசி தோல்வி

கோலாலம்பூர், ஆக. 12 –   நெங்கிரி   தொகுதிக்கான இடைத்தேர்தலை  நடத்துவதிலிருந்து  தேர்தல் ஆணையத்தை தடுக்க மேற்கொண்ட  முயற்சியில் அத்தொகுதியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது அஜிசி அபு நைம் இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்தார்.

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிடின் யாசின், கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்,  கிளந்தான் சட்டமன்ற  சபாநாயகர்  டத்தோ அமார் நிக் அப்துல்லா, தேர்தல் ஆணையம்  ஆகியோருக்கு எதிராக  தாம் தாக்கல் செய்த மூல வழக்கு முடியும் வரை இடைத்தேர்தலை நிறுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி  அஜிசி செய்து கொண்ட  விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் ரோஸ் மாவார் ரோசைன்  தள்ளுபடி செய்தார்.

இந்த விண்ணப்பம் சிக்கலான அரசியலமைப்பு விவகாரங்களை  எழுப்புவதால் அதனை பிரதான வழக்கின் மூலம் தீர்ப்பதே பொருத்தமானதாகும்.  அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு இடைக்கால தடைக்கான இந்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய  வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்டுத்தப்பட்டுள்ளது என்று நீதித் துறை ஆணையர் தனது தீர்ப்பில் கூறினார்.

இதே நீதிமன்றம் அஜிசியின் இடைக்காலத் தடை உத்தரவை கடந்த  ஜூன் 27 ஆம் தேதி நிராகரித்தது. அவர் இன்னும் இடைத்தேர்தலில் பங்கேற்க முடியும் என்பதால் அவருக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு ஏற்படவில்லை என அது கூறியது.

நெங்கிரி தொகுதி இன்னும் வாதியின் வசம் உள்ளதால் அங்கு இடைத்தேர்தலை  தேர்தல் ஆணையத்தால் நடத்த முடியாது என்று அறிவிக்க வேண்டும் என்று அஜிசி தனது  மூல மனுவில்  கோரியிருந்தார்.

நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பது அரசியலமைப்புச் செயல்பாடுகளில் தலையிடுவதற்கு சமம் என்று ரோஸ் மாவார் குறிப்பிட்டார்.

இடைத்தேர்தலில் அஜிஸி தன்னை வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கலாம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதாவது அவர் இனி அந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டிய ரோஸ் மாவார்,     நீதித்துறை தலையீடு இல்லாமல் தேர்தல் ஆணையம் தனது கடமைகளை தொடர முடியும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த  செயல்முறையை இப்போது நிறுத்துவது  பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், தளவாட சிக்கல்கள் மற்றும் தேவையற்ற  செலவினங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

பெர்சத்து கட்சி, சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு செலவுத் தொகையாக அஜிசி  30,000 வெள்ளியைச் செலுத்த வேண்டும் எனவும்  நீதித் துறை ஆணையர்  உத்தரவிட்டார்.


Pengarang :