NATIONAL

படகு பழுதானதால் 30 இந்தோ. கள்ளக் குடியேறிகள் எட்டு நாட்கள் கடலில் தத்தளிப்பு

ஈப்போ, ஆக. 13 – இயந்திரப் பழுது காரணமாக அடித்து வரப்பட்ட படகு
ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் அதிலிருந்த 30 இந்தோனேசிய
கள்ளக் குடியேறிகளை கைது செய்தனர். இச்சம்பவம் தஞ்சோங் ஹந்து
செகாரியிலிருந்து 9.9 கடல் மைல் தொலைவில் மஞ்சோங் கடல்
பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது.

‘பொம் பொம்‘ எனும் மரப்படகை தாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கடல்
போலீசாரிடமிருந்து நேற்று முன்தினம் இரவு 8.34 மணியளவில்
தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர்
ஏசிபி முகமது நோர்டின் அப்துல்லா கூறினார்.

அந்த படகைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட கடல் போலீசார்,
செல்லத்தக்க ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்த சந்தேகத்தின்
பேரில படகின் ஓட்டுநர் மற்றும் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 29 பேரை
கைது செய்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்டு 3ஆம் தேதி சபாக் பெர்ணத்திலுள்ள ஒரு இடத்தில் ஒன்று
கூடிய அந்த இந்தோனேசிய கள்ளக் குடியேறிகள் அனைவரும் படகின்
மூலம் அங்கிருந்து தங்கள் நாட்டிற்குப் புறப்பட்டது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.

எனினும், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த எட்டு
நாட்களாக கடலில் தத்தளித்த அவர்களை கடல் போலீசார் கண்டதாக
அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் 2007ஆம் ஆண்டு மனித வர்த்தகம் மற்றும்
புலம்பெயர்ந்தோர் கடத்தல் சட்டத்தின் (அத்திஸ்போம்) 26ஏ பிரிவு மற்றும்
1959ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் ((6)(1)(சி) பிரிவின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.


Pengarang :