NATIONAL

நெங்கிரி இடைத்தேர்தல்: தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை- பாரிசான் கூறுகிறது

குவா மூசாங், ஆக. 13 – நெங்கிரி சட்டமன்றத்  தொகுதி  இடைத்தேர்தலுக்கான  கொள்கைறிக்கையை பாரிசான் நேஷனல் வெளியிடாது. மாறாக, ஒரே ஒரு விஷயத்தை, அதாவது  மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்கும் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் அதன் பிரதிநிதியின் கடப்பாட்டை மட்டுமே அது வழங்கும்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில்  விரிவான தேர்தல் கொள்கையறிக்கையை  வெளியிடுவதில் அர்த்தமில்லை என்று கிளந்தான் பாரிசான் நேஷனல்  தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜஸ்லான் யாக்கோப் கூறினார்.

இடைத்தேர்தலுக்கான  தேர்தல் கொள்கையறிக்கையை நாங்கள் இம்முறை வெளியிட மாட்டோம். எங்களிடம் ஒரே  ‘எளிய அறிக்கை’ மட்டுமே உள்ளது. எங்கள் பிரதிநிதிக்கு மக்கள் வாய்ப்பு வழங்கினால்  அவர் நெங்கிரி மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய சேவைகளை வழங்குவார் என நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால்  நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம்.  1990ஆம் ஆண்டு தேர்தல்  வாக்குறுதிகள்  இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்றால் அறிக்கையை வெளியிடுவதில் என்ன பயன்? என அவர் கேள்வியெழுப்பினார்.

யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவெடுப்பதை வாக்காளர்களின் விவேகத்திற்கே  விட்டுவிடுவதாக கிளந்தான் அம்னோ தொடர்புக்குழு குழுத் தலைவருமான அகமது ஜஸ்லான் கூறினார்.

வரும் சனிக்கிழமை நடைபெறும் நெங்கிரி இடைத்தேர்தலில் ஒற்றுமை  அரசாங்கம் சார்பில்  தேசிய முன்னணி வேட்பாளர் முகமது அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கனி மற்றும் பெரிக்கதான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சி வேட்பாளர் முகமது ரிஸ்வாடி இஸ்மாயில் ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் முகமது அஜிசி அபு நைம் பெர்சத்து கட்சியிலிருந்து   வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாகக் கடந்த  ஜூன் 19ஆம் தேதி  கிளந்தான் மாநில சட்டமன்றத் தலைவர் டத்தோ முகமது அமார் நிக் அப்துல்லா அறிவித்தார்.


Pengarang :