NATIONAL

2024 ஜூன் வரை 290 கோடி வெள்ளி அனுகூலத் தொகையை சொக்சோ  வழங்கியது

குவா மூசாங், ஆக. 13 – இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை  நாடு முழுவதும் உள்ள சமூக பாதுகாப்பு நிறுவன (சொக்சோ) நிறுவன பயனாளிகளுக்கு 1969ஆம் ஆண்டு ஊழியர் சமூக பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (சட்டம் 4) 290 கோடி வெள்ளி அனுகூலத் தொகையாக வழங்கப்பட்டது.

தகுதியுள்ள 708,089 சொக்சோ பயனாளிகளுக்கு இந்த அனுகூலத் தொகை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டதாக மனித வளத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமது கூறினார்.

தற்காலிக முடத்தன்மை அனுகூலம், நிரந்தர முடத்தன்மை அனுகூலம், முழுமையான மற்றும் தவணை முறை முடத்தன்மை அனுகூலம், சார்புடையவர் முடத்தன்மை அனுகூலம், உடல் செயல்பாடு இல்லாமை பென்ஷன், வாழ்வாதார பென்ஷன் மற்றும் ஈமச்சடங்கு மேலாண்மைச் சலுகை அனுகூலம் என பல்வேறு பிரிவுகளில் இந்த நிதி பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீவிர பிரசார நடவடிக்கைகளின் வாயிலாக சட்டம் 4 இன் கீழ் தகுதி உள்ள ஊழியர்கள் சொக்சோவில் பதிந்துள்ள வேளையில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் சுயத் தொழில் சமூக பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 789) கீழ் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஊக்கமூட்டும் நடவடிக்கைத் தொடரப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொக்சோ மூலம் உதவி கிட்டும் என அவர் சொன்னார்.

பொது மக்கள் சொக்சோவில் இணைந்து சந்தா செலுத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். துர்திர்ஷ்டச் சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு உரிய அனுகூலம் கிடைப்பதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் 518,000 முதலாளிகள் சொக்சோவில் பதிந்துள்ள வேளையில் அதன் வாயிலாக மொத்தம் 72 லட்சம் ஊழியர்கள் சொக்சோ சந்தாதாரர்களாக ஆகியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :