NATIONAL

அமைச்சரவை மறுசீரமைப்பு ஆருடம்; மாநில தலைமைத்துவத்தை தொடர மந்திரி புசார் உறுதி

ஷா ஆலம், ஆக. 14 – மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் குறித்து பேசப்பட்டாலும் மாநில அரசை நான் தொடர்ந்து வழிநடத்துவேன் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மேம்பாட்டு இலக்கை, குறிப்பாக முதலாவது சிலாங்கூர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்ய இது அவசியமாகிறது என்று அவர் கூறினார்.

தாம் மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் தனக்கு வரவில்லை என்று கூறிய கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், அமைச்சரவை மறு சீரமைப்பு திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

நான் அமைச்சரவை உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான எந்த அறிகுறியும் இதுவரை  தென்படவில்லை. இருப்பினும்,   நான் அமைச்சரவை உறுப்பினராக எதிர்காலத்தில்  நியமிக்கப்பட்டால் விசுவாசமான பிகேஆர் கட்சி (கெஅடிலான் ராக்யாட்) உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றுவேன் என்று அவர் கூறினார்.

கெடிலான் கட்சியைச் சேர்ந்த  ஒரு மந்திரி புசார் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று வெளிவந்த வதந்திகள் குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

நேற்று டேவான்  ராஜா மூடா மூசாவில்  2024ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர்  டியூஷன் ராக்யாட் கல்வித் திட்டம்  தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

அதே சமயம்  அமைச்சரவை மறுசீரமைப்பு  திட்டத்தை அன்வார் நேற்று மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :