ANTARABANGSA

இஸ்ரேலுக்கு 2,000 கோடி டாலர் ஆயுதங்கள் விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், ஆக. 14 – இஸ்ரேலுக்கு 2,000 அமெரிக்க டாலர் (8,850 கோடி
வெள்ளி) மதிப்புள்ள போர் விமானங்கள் மற்றும் இராணுவத்
தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க நேற்று ஒப்புதல்
வழங்கியது.

காஸாவுக்கு எதிராக கடந்த பத்து மாதங்களாக இஸ்ரேல் தாக்குதல்
நடத்தி வரும் நிலையில் இந்த ஆயுத விற்பனை ஒப்பந்தம் அமலுக்கு
வந்துள்ளது. எனினும், இந்த ஆயுத விற்பனை அடுத்து எதிர்வரும்
ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படாது என்று அமெரிக்க தற்காப்பு
அமைச்சான பெண்டகன் கூறியுள்ளது.

மொத்தம் 1,900 கோடி அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள எப்-15 போர்
விமானங்கள் மற்றும் உபகரணங்கள், 77.4 கோடி டாலர் மதிப்பிலான
டாங்குகளுக்கான குண்டுகள், 6 கோடி டாலர் மதிப்புள்ள பீரங்கி குண்டுகள்,
58.3 கோடி டாலர் மதிப்புள்ள இராணுவ வாகனங்களை விற்பனை செய்ய
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிலிக்கன் ஒப்புதல்
அளித்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறியது.

போயிங் எப்-15 போர் விமானங்களைத் உருவாக்குவதற்கு பல ஆண்டுகள்
ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவை எதிர்வரும் 2029ஆம் ஆண்டில்
இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர
இராணுவத் தளவாடங்கள் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு தொடங்கி
விநியோகிக்கப்படும் என பெண்டகன் தெரிவித்தது.

சில ஆயுதத் தளவாடங்கள் 2026ஆம் ஆண்டிற்கு முன்பாகவே
இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
இதனிடையே, இப்பிராந்தியத்தில் தரமான இராணுவ ஆற்றலை இஸ்ரேல்
தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு உதவிய அமெரிக்காவுக்கு இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சர் இயோ கேலண்ட் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடாகவும் ஆயுத விநியோகிப்பாளராகவும்
அமெரிக்க விளங்கி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி
நிறுவனத்திடம் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி காஸா போர் தொடங்கியதிலிருந்து பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 10,000 குண்டுகளையும் ஆயிரக்கணக்கான எறிபடைகளையும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.


Pengarang :