NATIONAL

ஆட்சிக்குழு மறுசீரமைப்பு ஆருடம்-மாநிலத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி

ஷா ஆலம், ஆக. 16 – அண்மைய சில தினங்களாகப் பரபரப்பாக வெளிவந்து
கொண்டிருக்கும் மாநில ஆட்சிக்கு மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு
தொடர்பான ஆருடங்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட
ஓர் எச்சரிக்கை மணியாகும்.

தங்கள் பணிகளை நேர்மையாகவும் முறையாகவும் ஆற்ற வேண்டும்
என்ற நினைவூட்டலை ஓராண்டிற்கு முன்னர் நியமனம் பெற்ற
ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு இந்த ஆருடங்கள் வழங்கியுள்ளன என்று
இளைஞர் விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

ஆட்சிக்குழுவில் மாற்றம் செய்யப்படாது என்று மந்திரி புசார் நேற்று
முன்தினம் கூறியிருந்தார். தற்போதுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன்
இணைந்து பணியாற்றுவதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும்
அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாகவே ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள்
என்ற முறையில் நாம் மாநில அரசின் திட்ட இலக்குகளை
நிறைவேற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்ற நஜ்வான்
தெரிவித்தார்.

எனினும், ஆட்சிக்குழுவில் மாற்றம் இல்லை என்ற மந்திரி புசாரின்
அறிவிப்பு பதவியில் சொகுசாக நீடித்திருப்பதற்கான அனுமதிச் சீட்டு
அல்ல. மாறாக, மாநில மேம்பாட்டு இலக்கை அடைவதற்கு மேலும்
அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தேர்தலில் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம் நாம் வேலை
செய்யாமல் வெறுமனே இருப்பதற்கு அல்ல. மாநில வளர்ச்சிக்கான
பணிகளையும் சேவைகளையும் வழங்குவதில் நாம் கவனம் செலுத்த
வேண்டும் என்பதாகும் என்றார் அவர்.

மாநிலத்தின் சேவைத் திறனை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக
பி.கே.ஆர். மற்றும் ஜசெக உறுப்பினர்களை உட்படுத்திய ஆட்சிக்குழு
மறுசீரமைப்பை மேற்கொள்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து
வருவதாக இணைய ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி
வெளியிட்டிருந்தது.


Pengarang :