NATIONAL

ஷா ஆலம் டத்தோ பண்டாருடன் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சந்திப்பு-அடிப்படை வசதி திட்டங்கள் குறித்து பேச்சு

ஷா ஆலம், ஆக. 16 – கோத்தா கெமுனிங் தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திமுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் நேற்று சந்திப்பு நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது கோத்தா கெமுனிங் தொகுதியின் மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒங்கிணைக்கக்கூடிய ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகப் பிரகாஷ் கூறினார்.

இது தவிர தொகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் சாலை, வடிகால், போக்குவரத்து, பொது வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் குறித்தும் இச்சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது கோத்தா கெமுனிங் தொகுதியின் எதிர்காலம் குறித்த எனது எதிர்பார்ப்புகள் மற்றும் கருத்துகளை நான் முன்வைத்தேன். இத்தொகுதியின் மேம்பாடு மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடல் முன்னெடுப்புகள் விரிவானதாகவும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தினேன் என்றார் அவர்.

சவால்களை எதிர்கொண்டு திட்ட இலக்குகளை அடைவதில் தொகுதி சேவை  மையத்துடன் ஒன்றுபட்டு செயல்பட வாக்குறுதி அளித்த டத்தோ பவுஸிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் மாநகர் மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கோத்தா கெமுனிங் தொகுதியில் நீடித்த மற்றும் நேர்மறையான வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்ய முடியும் என பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்களான ராமு நடராஜன், பி. நத்திட்ரன் ராஜ் ஆகியோரும் பங்கு கொண்டனர்.


Pengarang :