பந்திங் தீ விபத்து- பாதிக்கப்பட்ட இந்தியக் குடும்பங்களுக்கு  உதவிகள் வழங்க தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் நடவடிக்கை

(ஆர்.ராஜா)

பந்திங், ஆக. 17- இங்குள்ள தாமான் ஸ்ரீ புத்ரா,  ஜாலான் தோமானில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று இந்தியக் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருவதாக கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் பேரிடர் நிதி மற்றும் எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் வாயிலாக நிவாரண உதவிகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அத்தொகுதியின் பி.கே.ஆர். தலைவருமான அவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை ஏற்பட்ட அத் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் தற்போது தங்கள் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக அவர் சொன்னார்.

இத் தீவிபத்து  தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.

இத் தீவிபத்து தொடர்பான தீயணைப்புத் துறையின் அறிக்கை கிடைத்தவுடன் நிவாரண உதவிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்  என அவர் குறிப்பிட்டார்.

இன்று விடியற்காலை 1.15 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக  சிலாங்கூர்  மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (நடவடிக்கை) அகமது முக்லிஸ் மொக்தார் இன்று காலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த விபத்தின் போது தங்கள் வீட்டின் பின்புறத்தில் சிக்கியிருந்த  மூவரை பொதுமக்கள்    பாதுகாப்பாக மீட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
.

அதிகாலை 1.15 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வாகனங்களும் எரிந்து போனதாகக் கூறிய அவர், பந்திங்,  கே.எல்.ஐ.ஏ. மற்றும் தெலுக் பங்ளிமாகாராங் நிலையங்களில் இருந்து  வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் என்றார்.


Pengarang :