NATIONAL

காஸா நெருக்கடியை தணிக்கும் கட்டாரின் முயற்சிகளுக்கு மலேசியா  முழு ஆதரவு-அன்வார்

கோலாலம்பூர், ஆக. 19 – காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காண்பதில்  முன்னுரிமை அளிக்கும் கட்டாரின் முயற்சிகளுக்கு மலேசியாவின் முழு ஆதரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தினார்.

மத்திய கிழக்கின் சமீபத்திய மேம்பாடுகள்  குறித்து  அந்நாட்டின் பிரதமரும்  வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் நேற்று  பிற்பகல் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசியப் பின்னர்   அன்வார் இவ்வாறு கூறினார்.

பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான விளைவுகளைப் பெறுவதற்கான ஒரு முக்கியமான வாய்ப்பை ஷேக் முகமது கோடிட்டுக் காட்டியதாகக் கூறிய அன்வார்,  இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரைவாகச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதாகச் சொன்னார்.

கட்டாரின் குறிப்பிடத்தக்க பங்கிற்கு எங்களின் உளப்பூர்வப் பாராட்டுகளை மலேசிய மக்கள் சார்பாக அவரிடம் தெரிவித்தேன். ஷேக் முகமதுவின் வேண்டுகோளை ஏற்று  இந்த முக்கியமான பணியில் உதவுவதற்கான எங்கள் கடப்பாட்டையும் உறுதிப்படுத்தினேன் என்றார் அவர்.

ஷேக் முகமது கேட்டுக் கொண்டபடி  சமாதான பேச்சுவார்த்தைகளை எளிதாக்குவதற்கும், போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கும், பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவதற்கும் ஏதுவாக விரைவில் நான் ஈரான் அதிபர் மற்றும் ஹமாஸ் பிரதிநிதியை தொடர்பு கொள்வேன் என்று அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :