NATIONAL

இந்திய மசாலைப் பொருட்களில் 12 விழுக்காடு தர நிர்ணயச் சோதனையில் தோல்வி

ஹைதராபாத், ஆக. 19 – இந்தியாவில்  சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மசாலைப் பொருட்களில் சுமார் 12 விழுக்காடு நிர்ணயிக்கப்பட்ட தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

மாசுபாடு தொடர்பில் இரு பிரபல மசாலை தயாரிப்பு பொருட்கள் மீது பல நாடுகள் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் இந்த உணவுப் பொருட்களை சோதனைக்கு உட்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

பூச்சிக்கொல்லி மருந்தின் அளவு அதிகமாக இருந்த காரணத்தால் எம்.டி.எச். மற்றும் எவரெஸ்ட் ரக மசாலை விற்பனையை ஹாங்காங் கடந்த ஏப்ரல் மாதம் தடை செய்ததைத் தொடர்ந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய முகமையின் அதிகாரிகள் மசாலைத் தூள் தயாரிப்பு பொருள்கள் மீது சோதனை மேற்கொண்டது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மசாலைப் பொருட்களுக்கும் பிரிட்டன் கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ள வேளையில் நியூசிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா  மசாலை பிராண்டுகள் விவகாரம் மீது தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளனர்.

இதனிடையே, எம்.டி.எச். மற்றும் எவரெஸ்ட் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உண்பதற்குப் பாதுகாப்பானவை என்று கூறியுள்ளனர். இவ்விரு நிறுவனத் தயாரிப்பிலான மசாலைப் பொருள்கள் இந்தியாவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. இவை உலகின் மிகபெரிய மசாலைப் பொருள் உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் விளங்குகின்றன. ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கும் இப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இவ்வாண்டு மே முதல் ஜூலை தொடக்கம் வரை 4,054 மசாலைப் பொருள்கள் மீது நடத்தப்பட்ட சோதனையில் 474 தயாரிப்புகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கிடைத்த தரவுகள் காட்டுகின்றன.


Pengarang :