NATIONAL

ஜோகூரில் வெ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்; கணவன்-மனைவி உள்பட எழுவர் கைது

ஜோகூர் பாரு, ஆக. 19 – இம்மாதம்  12ஆம் தேதி மாநகரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில்  ஒரு கோடி வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், கணவன், மனைவி உட்பட 7 பேரை கைது செய்தனர்.

பிற்பகல்  12.30 முதல் 2.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 22 முதல் 38 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆடவர்களும்  இரண்டு வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் சிபி எம் குமார் தெரிவித்தார்.

இவ்வாண்டு மே மாதம் முதல் இக்கும்பல் தீவிரமாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறிய அவர், பாதுகாவலர் வசதியுடன் கூடிய வேலியிடப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீட்டை எகஸ்டசி போதை மாத்திரைகளை பதப்படுத்துவதற்கும் பொட்டலமிடுவதற்கும்  பயன்படுத்துவது இக்கும்பலின் பாணியாகும் என்றார்.

இந்த நடவடிக்கையில் 59,627 கிராம் எக்ஸ்டசி பவுடர், 93.4 கிராம் கெத்தமின், 263 எக்ஸ்டசி மாத்திரைகள், 380 எராமின் 5 மாத்திரைகள் மற்றும் 41 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 10,001,122  வெள்ளியாகும் என்று இன்று ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் செய்தியாளர்  நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இக்கும்பலிடமிருந்து நான்கு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், பல்வேறு தங்க ஆபரணங்கள் மற்றும் உள்நாட்டு,  வெளிநாட்டு நாணயங்கள் உள்பட 235,257 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர் என்று அவர் சொன்னார்.

இச்சோதனைகளில் போதைப் பொருள்களுடன் சேர்த்து கைப்பற்றப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 1 கோடியே 2 லட்சத்து  30 ஆயிரம் வெள்ளியாகும். இவ்வாண்டு ஜோகூரில்  மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பெரிய போதைப் பொருள் பறிமுதல் நடவடிக்கை இதுவாகும் என்றார் அவர்.

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின்  39பி பிரிவின் விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபர்கள் எதிர்வரும்  வியாழக்கிழமை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :