NATIONAL

20 முன்னணி ஏ.ஐ. நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்க மக்களின் ஒத்துழைப்பு தேவை-  பிரதமர் கூறுகிறார்

ஷா ஆலம், ஆக. 19 – செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் முதல் 20 நாடுகளில் ஒன்றாக விளங்கும் மலேசியாவின் விருப்பத்தை அடைவதற்கு அனைத்துத் தரப்பினரும்  ஆதரவையும் பங்களிப்பையும் வழங்க  வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அந்த நோக்கத்திற்காக, ஏ.ஐ. தொடர்பான தொழில்நுட்பத்தை  பொறுப்புடனும் நெறிமுறையுடனும் உருவாக்குவது மற்றும் மேம்படுத்துவதில் ஆராய்ச்சியாளர்கள், மேம்படுத்துவோர் மற்றும் முடிவெடுப்பவர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தேசிய ஏ.ஐ. சூழல் அமைப்பை உருவாக்க உதவுவதில் குறிப்பாக மலேசியாவின் சொந்த ஏ.ஐ. கிளாவுட் கம்ப்யூட்டிங் அமைப்பை உருவாக்குவது உட்பட ஏ.ஐ. கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கு உதவ நாங்கள் (அரசாங்கம்) ஒப்புக் கொண்டுள்ளோம்.

அதே சமயம், மனித மதிப்பு கூறுகள், தரவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு ஆகியவை இந்த தொழில்நுட்பத்தால் பாதிக்கப்பட்டு ஒரு புதிய அர்த்தத்தை வழங்குகின்றன என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர்  குறிப்பிட்டார்.

இன்று, இங்குள்ள மாரா தொழில் நுடப பல்கலைக்கழகத்தில் அனைத்துலகப் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு மாநாட்டின தொடக்க நிகழ்வுக்கு வழங்கிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையை துணை உயர் கல்வி அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் வாசித்தார்.

மக்களின் வாழ்க்கைத் தரம், செயல்திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்த உதவும் அதேவேளையில் இந்த நவீன மற்றும் ஆற்றல்மிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் சமூகம் அறிந்திருக்க வேண்டிய இருண்ட பக்கத்தையும் கொண்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும் என்று அன்வார் குறிப்பிட்டார்.

எனவே, சமூகம் மற்றும் மக்களின் வாழ்வில் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய தாக்கத்தின் அபாயங்களைக் கண்டறிந்து அதன் ஆபத்தைக் குறைப்பதே அரசாங்கத்தின் பொதுவான அணுகுமுறையாகும் என்றார் அவர்.


Pengarang :