NATIONAL

கட்டுப்பாட்டை இழந்த லோரி வீட்டை மோதியது – குடும்ப மாது மயிரிழையில் உயிர் தப்பினார்

புக்கிட் காயு ஹீத்தாம், ஆக. 20 – கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லோரி
சாலையோரம் இருந்த வீட்டின் முன்புறத்தை மோதியது. இச்சம்பவத்தின்
போது வீட்டிலிருந்த குடும்ப மாது எந்த காயமுமின்றி தெய்வாதீனமாக
உயிர்த்தப்பினார்.

இங்குள்ள தாமான் டேசா பாயான் இமாஸில் நேற்று பிற்பகல் 2.30
மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. வீட்டின் அறையில் தாம் இருந்த
போது வெளியே பலத்த பிரேக் சத்தம் கேட்டதாக ஷபிகா ஷாபி (வயது 37)
என்ற அந்த குடும்ப மாது கூறினார்.

பிரேக் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டதைத் தொடர்ந்து சன்னல் வழியாக
வெளியே எட்டிப் பார்த்தேன். எதுவும் தென்படாத நிலையில் வீட்டின்
சமையலறை நோக்கிச் சென்றேன். அப்போது பலத்த மோதல் சத்தம்
எழுந்தது. அடுத்த கணம் லோரி ஒன்று வீட்டின் கார் நிறுத்துமிடத்தை
மோதி நின்றது என அவர் சொன்னார்.

இச்சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உடல் நடுங்கத் தொடங்கியது,
அதிர்ஷ்டவசமாக அண்டை வீட்டார் உதவிக்கு வந்தனர். சரியான
நேரத்தில் அறையிலிருந்து வெளியேறியதால் உயிர்த்தப்பினேன் என்று
அவர் தெரிவித்தார்.

அந்த லோரி வீட்டின் அறையை மோதாவிட்டாலும் கற்களும் வீட்டின்
உள்கூரையும் பெயர்ந்து அறையில் விழுந்தன. அதோடு வீட்டின் முன்புறம்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் மோட்டார் சைக்கிளும் கடுமையாகச்
சேதமடைந்தன என்றார் அவர்.

இங்கு தாம் கடந்த எட்டு ஆண்களாக வசித்து வருவதாகவும்
இக்காலக்கட்டத்தில் வீட்டின் முன்புறம் உள்ள சாலை வளைவில்
லோரிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள்
அடிக்கடி நிகழ்ந்துள்ளன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :