NATIONAL

மலேசியா – இந்திய உறவை வலுப்படுத்தும் விதமாக புதுடில்லி பயணத்தை தொடக்கினார் பிரதமர் அன்வார்

புதுடில்லி, ஆக. 20 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு நேற்றிரவு புதுடில்லி சென்று சேர்ந்தார்.

மலேசியா- இந்தியா இடையிலான 67 ஆண்டுகால உறவை வலுப்படுத்துவதையும் பல்துறை ஒத்துழைப்புக்கான எதிர்கால இலக்கை உருவாக்குவதையும் பிரதமரின் இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான பேராளர் குழுவினர் பயணம் செய்த சிறப்பு விமானம் புதுடில்லி, பாலாம் விமானப் படைத்தளத்தில் உள்ளுர் நேரப்படி 9.47 மணிக்கு தரையிறங்கியது.

பிரதமரின் இந்த பேராளர் குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அஜிஸ், சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிரதமர் அன்வாரை இந்திய ரயில்வே துறை அமைச்சர் வி.சோமன்னா, இந்தியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ முஸாபார் ஷா முஸ்தாபா, மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.

நேற்று தொடங்கிய பிரதமரின் இந்தப் பயணம் நாளை 21ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. பிரதமராகக் கடந்த 2022ஆம் ஆண்டு பதவியேற்றப் பின்னர் இந்தியாவுக்கு அன்வார் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

இன்று காலை நடைபெறும் அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வுக்குப் பிறகு பிரதமர் அன்வார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்துவார்.

கடந்த 2015ஆம் ஆண்டு விவேகப் பங்காளித்துவ நிலைக்கு உயர்வு கண்டுள்ள மலேசிய-இந்திய உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பதற்குரிய களமாகப் பிரதமரின் இந்த பயணம் அமைந்துள்ளது.

மலேசியா-இந்தியா இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக இந்திய தொழில்துறையினர் பங்கேற்கும் வட்ட மேசைக் கூட்டத்தில் அன்வார் பங்கேற்பார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் 7,662 கோடி வெள்ளியை எட்டியது. இதில் மலேசியாவின் உபரி முதலீட்டின் மதிப்பு 1,589 கோடி வெள்ளியாக இருந்தது.

மலேசியாவின் மிகப்பெரிய செம்பனை மற்றும் செம்பனை சார்ந்த பொருள்களின் இறக்குமதியாளராக விளங்கும் இந்தியா 1,131 கோடி வெள்ளி மதிப்புள்ள செம்பனை சார்ந்த மூலப்பொருள்களை இறக்குமதி செய்தது.

கடந்த 2023ஆம் ஆண்டில் ஆசியான் நாடுகளைப் பொறுத்த வரை இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக மலேசியா விளங்கியது. இந்தியாவும் மலேசியாவும் நீண்ட நெடிய பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்ட நாடுகளாக விளங்கி வருகின்றன.


Pengarang :