NATIONAL

சுக்மா 2024: 69 பதக்கங்களை பெற சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஆக.  20 – சரவாக் மாநிலத்தில்  நடைபெறும் 21வது மலேசியா விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) களமிறங்கியுள்ள சிலாங்கூர் அணி,  ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்  இப்போட்டிகளில்  குறைந்த பட்சம் 69 பதக்கங்களைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்போது   11 தங்கம், 25 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் சிலாங்கூர் நான்காவது இடத்தில் உள்ளது. உபசரணை மாநிலமான சரவாக் முதலிடத்திலும்  திரங்கானு,  மற்றும் கூட்டரசு பிரதேசம் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன.

ஆக சமீபத்தில், அதாவது நேற்று, கூச்சிங், பெட்ரா ஜெயாவில் உள்ள சரவாக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற  ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முகமது டேனிஷ் இர்ஃபான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  17 வயதான அவர் 10.60 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார்.

ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில்   முகமது இசுல் ஹனிப் வெள்ளிப் பதக்கமும்   பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில்   நூர் அஃப்ரினா பட்ரிஷியா தங்கப் பதக்கமும் வெற்றனர்.

சுக்மா 2024  போட்டி நடைபெறும் இந்த ஒரு வாரத்தில் சிலாங்கூர்  அணி வூஷூ,  கராத்தே, கோல்ஃப், டென்பின் பந்துவீச்சு மற்றும்  நீச்சல் உட்பட பல போட்டிகளின் வாயிலாகப் பதக்கங்களை வென்றுள்ளது.


Pengarang :