NATIONAL

தேசிய தினத்தை முன்னிட்டு இம்மாதம் 26 முதல் 31 வரை ட்ரோன்களைப் பறக்கவிடத் தடை

கோலாலம்பூர், ஆக. 20 – இவ்வாண்டு தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறும்  கொண்டாட்டங்கள் மற்றும் அணிவகுப்பு பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிட ஆகஸ்டு 26 முதல் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய தினத்திற்கான  ஆயத்தங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் பாதுகாப்பான முறையில்  நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் பொதுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவும் இந்த தடை அமல் செய்யப்படுவதாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சி.ஏ.ஏ.எம்.) கூறியது.

தேசிய தினக்  கொண்டாட்டப் பகுதிகளில் தாழ்வாகப் பறந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை,  அரச மலேசியன் ஆகாயப்படை, அரச மலேசிய போலீஸ் படை விமானங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதையும் இந்தத் தடை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொதுமக்கள் அல்லது சொத்துக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ட்ரோன்களைப் பறக்க விடுவது உட்பட எந்தவொரு விமான நடவடிக்கையும் 1969ஆம் ஆண்டு  சட்டம் வான் போக்குவரத்துச் சட்டத்தின் 4வது பிரிவு மற்றும் மலேசிய சிவில் விமான போக்குவரத்து  விதிமுறை 98, 140 முதல் 144 வரையிலான ஷரத்துகளின் கீழ் குற்றமாகும் என சி.ஏ.ஏ.எம். முகநூல் வழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் [email protected] என்ற அகப்பக்கம் அல்லது www.caam.gov.my  வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :