NATIONAL

வெ.139 கோடி கூடுதல் வருமான வரிக்கான மதிப்பீட்டு அறிக்கை –  தெனாகா நேஷனல் மேல் முறையீடு

கோலாலம்பூர், ஆக. 21 –  68 கோடியே 58 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மற்றும் 70 கோடியே 52 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை உட்படுத்திய 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் கூடுதல் மதிப்பீட்டு அறிக்கைக்கு எதிராக தாங்கள்  மேல்முறையீடு செய்யப்போவதாக தெனாகா நேஷனல்  பெர்ஹாட் (டி.என்.பி.) நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள் அன்று பெறப்பட்ட இந்த அறிக்கைகள் கடந்த ஆண்டுகளில் பெற்ற அறிக்கைகளைப் போலவே இருப்பதாகவும் அவை தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில்  இருக்கும் வேளையில் சர்ச்சைக்குரிய வரிகளை செலுத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைத் தாங்கள் பெற்றுள்ளதாகவும் அந்த எரிசக்தி பயனீட்டு நிறுவனம் மலேசிய பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வரி வழக்கறிஞர்களிடமிருந்து பெறப்பட்ட சட்ட ஆலோசனையின் அடிப்படையில், அந்த வரி மதிப்பீடுகளை உள்நாட்டு வருமான வரி வாரியம் தவறாக உயர்த்தியதாக வாதிடுவதற்கு சட்டத்தில் நல்ல அடிப்படை ஆதாரங்கள்  இருப்பதாக டி.எ.பி. கருதுகிறது.

ஆகவே,  முன்பைப் போலவே இம்முறையும் இந்த அறிக்கைக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியது.


Pengarang :