NATIONAL

காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்ட இரு சிறார்கள் 9 மணி நேரத்திற்குப் பின் மின் தூக்கியில் கண்டுபிடிப்பு

கோலாலம்பூர், ஆக. 21- காணாமல் போனதாகப் புகார் செய்யப்பட்ட  10 வயதுடைய இரு சிறார்கள் ஒன்பது மணி நேரத்திற்குப் பின்னர் செராஸ், தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மின் தூக்கியில் சிக்கிக் கொண்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

உணவு வாங்குவதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணியளவில்
வீட்டை விட்டு வெளியேறிய அச்சிறுவர்கள் வீடு திரும்பாதது தொடர்பில்
அன்றைய தினம் இரவு 9.26 மணிக்கு தாங்கள் புகாரைப் பெற்றதாக
செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏஎஸ்பி ரவீந்தர் சிங் சர்பான் சிங்
கூறினார்.

நேற்று விடியற்காலை 12.30 மணியளவில் அந்த குடியிருப்பிலுள்ள
கண்காணிப்பு கேமராவைச் சோதனையிட்ட அக்குடியிருப்பின் நிர்வாக
தரப்பினர் அவ்விருவரும் நான்காவது மாடியில் மின் தூக்கியில்
சிக்கியிருப்பதைக் கண்டனர் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சுமார் ஒன்பது மணி நேரம் அந்த மின் தூக்கியில் சிக்கியிருந்த
அச்சிறார்கள் குடியிருப்பின் நிர்வாகத் தரப்பினரால் பாதுகாப்பாக
மீட்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

நல்ல நிலையில் காணப்பட்ட அச்சிறார்கள் பின்னர் அவர்களின்
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் அவர் மேலும் சொன்னார்.


Pengarang :