NATIONAL

சிம்பாங் லீமா, மின்சுடலை புறக்கணிப்பா? கிள்ளான் மாநகர் மன்ற உறுப்பினர் யுகராஜா மறுப்பு

(ஆர்.ராஜா)
கிள்ளான், ஆக. 21- கிள்ளான், சிம்பாங் லீமா மின்சுடலையில் பழுதுபார்ப்பு
மற்றும் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக்
கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.) உறுப்பினர் பி.யுகராஜா
கூறினார்.

அந்த மின்சுடலை தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில்
உண்மை இல்லை எனக் கூறிய அவர், அங்குள்ள கழிப்பறைகள்
பயன்படுத்தும் நிலையில் உள்ளதோடு மூன்று தகன மேடைகளில்
இரண்டு தற்போது பயன்பாட்டிலும் உள்ளதாகச் சொன்னார்.

இந்த மின்சுடலை தொடர்பில் சமூக ஊடங்களில் வெளிவந்த புகார்களைத்
தொடர்ந்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் மற்றும்
பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங்கின் உத்தரவின்
பேரில் சக கவுன்சிலர்கள், மாநகர் மன்றத்தின் பொறியியல் துறை, மற்றும்
சுகாதாரத் துறையின் அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் தாம்
ஆய்வினை மேற்கொண்டதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வில் மின்சுடலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக
சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட குத்தகையாளர் பணிகளை
முறையாக மேற்கொண்டு வருவது தெரிய வந்தது. அதே சமயம்,
அங்குள்ள கழிப்பறைகள் நல்ல நிலையில் இருப்பதோடு இரு தகன
மேடைகளும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பழுதடைந்த மற்றொரு தகன மேடையை பழுதுபார்க்கும் பணி தற்போது
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி வரும் அக்டோபர் மாத இறுதியில்
முற்றுப் பெறும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

தகன மேடையை பழுதுபார்க்கும் பணி முற்றுப் பெற்றப் பின்னர்
மின்சுடலையின் வெளிப்புற வளாகத்தை தரம் உயர்த்தும் பணியை
குத்தகையாளர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது என யுகராஜா
கூறினார்.


Pengarang :