ஷா ஆலம், ஆகஸ்ட் 23: சிஜாங்காங் தொகுதி சேவை மையம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை  உற்சாகப்படுத்தும்  வகையில் தேசப்பற்று பிரச்சாரத்தை ஏற்பாடு செய்கிறது.

செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி மூன்று நாட்களுக்கு  ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இருப்பிடங்களுக்கு   தேசப்பற்று விஜய திட்டத்தை ஏற்பாடு செய்ய தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் டத்தோ சூரிஹான் யூசோப் கூறினார்.

“நாங்கள் சிஜாங்காங் தொகுதியில் உள்ள ஒன்பது கிராமங்களில், ஓய்வு பெற்ற வயதான இராணுவ வீரர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

“சுதந்திரத்தைக் கொண்டாடுவதோடு, தாய் நாட்டின் மீது மிகுந்த பக்தியை விதைத்த முன்னாள் இராணுவப் போராளிகளின் சேவைகளைப் பாராட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,” என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.

இந்த பயணத்தின் மூலம், சிஜாங்காங்கில் உள்ள ஒன்பது கிராமங்களில் சுமார் 45 ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை  சந்திக்க இலக்கு வைத்துள்ளதாக சூரிஹான் விளக்கினார்.

இந்த பயணத்தின் ஊடே,  தாயகத்திற்கு  இவர்கள்  ஆற்றிய சேவைகளை பாராட்டி பண உதவி, உடைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

ஶ்ரீ செடிங், ஜெயா செப்பாகாட், ஜெஞ்சாரோம், கெபூன் பாரு, பத்து 9 கெபூன் பாரு, கம்போங் மேடான், சிஜாங்காங், தெலுக் பங்லிமா காராங் மற்றும் கம்போங் மெலாயு பூலாவ் கேரி ஆகிய ஒன்பது கிராமங்களில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.