தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த மலேசியா-இந்தியா விருப்பம்

புதுடில்லி, ஆக. 25 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அண்மைய  புதுடில்லி பயணத்தைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக தங்கள் பொருளாதார உறவை மேம்படுத்த மலேசியாவும் இந்தியாவும் விருப்பம் கொண்டுள்ளன.

டிஜிட்டல் பொருளாதாரம், செமிகண்டக்டர் உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, உள்கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுலா போன்ற பல துறைகளில் அணுக்கமான  ஒத்துழைப்பை நல்குவது குறித்து இருதரப்பு சந்திப்பின் போது ​​பிரதமர் அன்வாரும்  இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் விவாதித்தனர்.

முக்கியத்  தூண்களாக விளங்கும் இவை அனைத்தையும் உள்ளடக்குவதற்கு  எங்களுக்கிடையிலான  ஒத்துழைப்பை இன்னும் விரிவான அளவுக்கு  உயர்த்துவோம் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார் .

கடந்த 2011 ஆம் ஆண்டு கையெழுத்தான வர்த்தகம் மற்றும் முதலீட்டை உள்ளடக்கிய மலேசியா-இந்தியா விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேலும் மேம்படுத்தப்படும் என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் கவனம் செலுத்த விரும்பும் துறைகளை அடையாளம் காணவும் மேம்படுத்தலுக்கான அளவீடுகளை உருவாக்கவும் இரு நாட்டுப் பிரதமர்களும் எங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளனர் என்று அன்வாரின் இந்தியப் பயணத்தில் இடம் பெற்றிருந்த தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

அன்வாரின் வருகையின் போது மலேசியாவும் இந்தியாவும் கலந்துரையாடிய விஷயங்களின் வாயிலாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இரசாயனம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாத்தியமான வணிக வாய்ப்புகளை உருவாக்கம் கண்டது என்றார் அவர்.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு 1,650 கோடி அமெரிக்க  டாலராக இருந்தது. மலேசியாவின்  11வது பெரிய ஏற்றுமதி நாடாகவும்  12வது பெரிய இறக்குமதி  நாடாகவும் இந்தியா விளங்குகிறது.

மாறிவரும் வர்த்தக சூழல் காரணமாக  இந்தியாவிற்கான மலேசியாவின் மின்சாரம் மற்றும் மின்னியல் பொருட்களின் ஏற்றுமதி  கணிசமாக உயர்ந்துள்ளது.  அதே சமயம் இருபது ஆண்டுகளுக்கு  முன்னர் மூன்றில் இரண்டு பங்காக இருந்த மூலப் பொருள் வணிகம்  இப்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

அதேபோல், இந்தியாவின் ஏற்றுமதி  முன்பு விவசாயப் பொருட்களைப் பிரதானமாக கொண்டிருந்த வேளையில்  இப்போது பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் பொறியியல் பொருட்களுக்கு  ஏற்றுமதி மாறியுள்ளது.


Pengarang :