NATIONAL

எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கையில் ஐவர் கைது-16 லட்சம் லிட்டர் டீசல், வெ.37 லட்சம் பறிமுதல்

கோலாலம்பூர், ஆக. 26 – மீனவர் சங்கத்திற்குச் சொந்தமான மானிய விலை
டீசலை பதுக்கியது மற்றும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக
அமலாக்க அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கியது தொடர்பில் ஐந்து
நபர்களை ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்.) தடுத்து
வைத்துள்ளது.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று மாலை 4.00 மணியளவில் சரவாக்
மாநிலத்தின் சிபு எஸ்.பி.ஆர்.எம். கிளை அலுவலகத்திற்கு வந்த போது 30
முதல் 60 வயது வரையிலான அந்த மூன்று ஆடவர்களும் இரண்டு
பெண்களும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு
ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இக்கும்பல் மீனவர்களின்
பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட மானிய விலை டீசலை வெளி
தரப்பினருக்கு குறிப்பிட்ட விலையில் விற்றதன் மூலம் 40 கோடி
வெள்ளி வரை லாபம் ஈட்டியுள்ளது எஸ்.பி.ஆர்.எம். மேற்கொண்ட
விசாரணை மற்றும் உளவு நடவடிக்கையில் தெரிய வந்துள்ளதாக அவர்
சொன்னார்.

உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சுடன்
இணைந்து சுங்கை பாடுட்டில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கு
ஒன்றைச் சோதனையிட்டு 16 லட்சம் லிட்டர் டீசலைக் பைற்றியதோடு 37
லட்சம் வெள்ளியையும் தாங்கள் பறிமுதல் செய்ததாக அவர்
குறிப்பிட்டார்.

மானிய விலை டீசலைப் பதுக்கும் நடவடிக்கையில் முக்கியப்
புள்ளிகளாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பெட்ரோல்
நிலைய உரிமையாளர்கள் மற்றும் டீசல் விற்பனைக் கொள்முதல்
நடவடிக்கையில் ஈடுபட்ட தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்ட அந்த
ஐந்து நபர்களாவர் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைவரையும்
விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணை பெறப்படும்
எனக் கூறிய அவர், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 2009ஆம்
ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் 18 மற்றும் 16(பி)(பி) பிரிவு, தண்டனைச்
சட்டத்தின் 471வது பிரிவு மற்றும் 1961ஆம் ஆண்டு விநியோகச் சட்டம்
ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று
மேலும் சொன்னார்.


Pengarang :