SELANGOR

நிச்சயமற்ற வானிலை- பொழுதுபோக்கு முகாம்களில் எஸ்.ஒ.பி. நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டுகோள் 

கோல சிலாங்கூர், ஆக. 26 – பொழுதுபோக்கு முகாம்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஏதுவாக பொழுதுபோக்கு முகாம் நடத்துனர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நிலையான செயலாக்க நடைமுறைகளைப் (எஸ்.ஒ.பி.) பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் முழுமையான விபரங்கள் அடங்கிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதால் தற்போதைய நிச்சயமற்ற வானிலையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க அதனை அவர்கள் எந்நேரமும் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

ஆபத்து நிறைந்த பகுதிகளில் குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விரைவில் வரவிருக்கும் பள்ளி விடுமுறையின் போது கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி சம்பந்தப்பட்டத் துறைகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

பொழுதுபோக்கு மையங்களுக்கான எஸ்.ஒ.பி. வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அது பொது விடுமுறை அல்லது பள்ளி விடுமுறையை மட்டும் உள்ளடக்கவில்லை. ஆகவே, ஆபத்து நிறைந்த பகுதிகளில் அடிக்கடி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி சரணாலயத்தில் மலர் ஹீஜாவ் பதியமிடும் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்

பொழுதுபோக்கு மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் பொழுதுபோக்கு முகாம் திட்டமிடல் வழிகாட்டி ஊராட்சி மன்றங்களுக்கு தேசிய மன்றம் கடந்த மார்ச் மாதம் அங்கீகரித்தது.

வருகையாளர்கள், முகாம் நடத்துனர்கள் மற்றும் ஊராட்சி மன்ற அமலாக்கத் தரப்பினருக்கான அந்த வழிகாட்டியில் திட்டமிடல், மேம்பாட்டு  செயல்முறை, கண்காணிப்பு மற்றும் முகாம் மேலாண்மை ஆகிய மூன்று முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


Pengarang :