NATIONAL

பாதிக்கப்பட்ட 76 மாணவர்கள் வேன்கள் மூலம் பள்ளிகளுக்கு ஏற்றி செல்லப்பட்டனர்

சிலாங்கூர், ஏப்ரல் 7 – புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருக்கும் 76 மாணவர்கள், Rapid KL-On Demand ஏற்பாடு செய்திருந்த 5 வேன்கள் மூலம் சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள 19 பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதில், 42 ஆரம்பப் பள்ளி மாணவர்களும் 34 இடைநிலைப்பள்ளி மாணவர்களும் அடங்குவர்.

மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்பும் செயல்முறை சீராக இருப்பதை உறுதி செய்ய, மாவட்ட கல்வி அலுவலகம், பிபிடி மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தமது தரப்பு முன்னேற்பாட்டு திட்டங்களை செய்து விட்டதாக, Rapid Bus Sdn Bhd நிறுவனத்தின் மத்திய கூட்டரசு தலைவர் கைரூல் அஸ்ஹார் ஹமிடுல்லா கூறினார்.

மொத்த மாணவர்களில் 60 பேர் காலை அமர்விலும், 16 பேர் மாலை அமர்விலும் பயில்வதாக அவர் தெரிவித்தார். எனினும், காலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவ்வப்போது அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அவர் கூறினார்.

யாயாசான் இஸ்லாம் டாருல் இசான், YIDE, பெட்டாலிங் பெர்டானா மாவட்ட கல்வி அலுவலகம், பிபிடி, சமூக நலத் துறை, ஜேகேஎம் மற்றும் Prasarana Malaysia நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, கைரூல் அஸ்ஹார் விவரித்தார்.

-பெர்னாமா


Pengarang :