NATIONAL

எரிவாயு குழாய் தீ விபத்தில் 6.54 கோடி வெள்ளி இழப்பு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஏப். 7 – இம்மாதம் 1 ஆம் தேதி சுபாங் ஜெயா,  புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் ஏற்பட்ட மொத்த இழப்பு மற்றும் சொத்து சேதம் 6 கோடியே 54 லட்சம் வெள்ளி  என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 437 வீடுகளில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையிலான தொழில்நுட்பக் குழு மேற்கொண்ட ஆய்வின்  அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

இந்தப் பேரிடரில் 81 வீடுகள் முற்றாகச்  சேதமடைந்த வேளையில்  81 வீடுகளுக்கு  பகுதியளவு  சேதம் ஏற்பட்டது. மேலும்  57 வீடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் தீயில் எரியவில்லை. இதர  218 வீடுகள் பாதிக்கப்படவில்லை அவர் கூறினார்.

தீயணைப்புத் துறை போன்ற பாதுகாப்புக் குழுக்களின் உடனடி நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உதவியால்  இந்த பேரிடரில்    28 கோடியே 59 லட்சம் வெள்ளி மதிப்புள்ள  சொத்துகள் காப்பாற்றப்பட்டன என அவர் சொன்னார்.

பொது உள்கட்டமைப்பு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது  என்று  இன்று மாநில செயலகக் கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர்  சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

சோதனை தொடர்பான  ஆரம்பகால  பரப்பளவு 290 சதுர மீட்டரிலிருந்து 325 சதுர மீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளதாகவும் அமிருடின் விளக்கினார்.

இன்றைய நிலவரப்படி 151 வீடுகள் பாதுகாப்பானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.   இந்த வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைக்கு இருப்போர் இல்லம் திரும்ப  அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சில வீடுகளுக்கு சிறிதளவு  சேதம் ஏற்பட்டிருக்கலாம்.  அதற்கான பழுதுபார்க்கும் செலவுகளை உரிமையாளர்கள் ஏற்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.

சேதமடைந்த வீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகளை பழுதுபார்ப்பு உட்பட மீட்பு பணிகளை  மேற்பார்வையிடும் பொறுப்புக்கு  துணை மாநில செயலாளரும் (மேம்பாடு) மாநிலப் பொருளாதார திட்டமிடல் பிரிவு இயக்குநருமான  டத்தோ ஜோஹரி அனுவார் நியமிக்கப்பட்டுள்ளதாக அமிருடின் அறிவித்தார்.


Pengarang :