NATIONAL

நீண்ட காலப் பயண அனுமதி வைத்திருக்கும் இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்தோர் மலேசியா வரத் தடை

ஷா ஆலம், செப் 1- நீண்ட காலப் பயண அனுமதி வைத்திருக்கும் இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியா வருவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடு வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அமலுக்கு வருவதாகப் பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

சில நாடுகளில் கோவிட் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது மீதான சிறப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து நோய் தொற்று இறக்குமதியாவதைத் தடுப்பதற்குச் சுகாதார அமைச்சு முன்வைத்த ஆலோசனை இவ்விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்பட்டதாக அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

நிரந்தர வசிப்பிடத் தகுதி உள்ளவர்கள், மலேசியா எனது இரண்டாவது இல்லம் திட்டத்தின் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், நிபுணர்களுக்கான சிறப்பு அனுமதி உள்ளவர்கள், வெளிநாட்டு துணைவியருக்கான அனுமதி கொண்டவர்கள், மாணவர்கள் ஆகிய தரப்பினரை இத்தடை உள்ளடக்கியிருக்கும் என்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் தெளிவுபடுத்தினார்.

 

 


Pengarang :