NATIONAL

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறினால் நீதிமன்ற நடவடிக்கை! இரவு விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா, செப் 1- மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் அனுமதியின்றி வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் இரவு மையங்கள் மற்றும் மதுபான விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விடுதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றும் அனுமதியை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் அத்துறைகள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை எனக் கூறிய அவர், உத்தரவை மீறும் மையங்கள் மீது  1988ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறி மதுபான மற்றும் இரவு விடுதிகளில் இருந்த காரணத்தால் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

இரவு விடுதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்துச் சோதனை நடவடிக்கைகளிலும் ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளும் இணைத்துக் கொள்ளப்படுவர் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

ஊராட்சி மன்ற அமலாக்கத் துறையினரின் பங்கேற்பின்றிச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படுவதற்கு ஏதுவாகச் சம்பந்தப்பட்ட விடுதிகளின் பட்டியல் ஊராட்சி மன்றங்களிடம் வழங்கப்படும் என்றார் அவர்.

இரவு விடுதிகள் செயல்படத் தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் உரிமையாளர்களில் சிலர் தன்மூப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆதலால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய காரணத்திற்காக நேற்று கைது செய்யப்பட்ட 778 பேரில் 600 பேர் இரவு விடுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் என அவர் தெரிவித்தார்.


Pengarang :