SELANGOR

எதிர்பாராத சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கூடுதல் நீர் சுத்திகரிப்பு மையங்கள்

கோலாலம்பூர், செப் 6- எதிர்பாராத வகையில் ஏற்படும் நீர் தட்டுப்பாடு பிரச்னைகளின்
போது சுங்கை சிலாங்கூரில் உள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு மையங்களை மட்டுமே
சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்காக அண்மைய ஆண்டுகளில் கூடுதலாக நீர் சுத்திகரிப்பு
மையங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அந்த நீண்டகால திட்டத்தின் வழி சேவைத் தரத்தை மேம்படுத்த முடிந்ததோடு
பயனீட்டாளர்களுக்குச் சுத்தமான நீரை விநியோகிக்கவும் முடிந்ததாக அவர் சொன்னார்.
லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணிப்புத்
திட்டத்திற்கு நாம் தயாராகிவிட்டோம். முன்பு சுங்கை சிலாங்கூர் சுத்திகரிப்பு மையத்தில்
பிரச்னை ஏற்படும் பட்சத்தில் லங்காட் சுத்திகரிப்பு மையத்தை மட்டும் நாம்
நம்பியிருந்தோம் என்றார் அவர்.

நாளொன்றுக்கு ஐந்து கோடி லிட்டர் நீரை விநியோகிக்கும் ஆற்றலை லபோஹான் டாகாங்
நீர் சுத்திகரிப்பு கொண்டுள்ளது. சுங்கை சிலாங்கூர் மையம் பிரச்னையை எதிர்நோக்கும்
போது கோல லங்காட் மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு லபோஹா டாகாங் மையத்தால்
நீர் விநியோகம் செய்ய முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.

லங்காட் 2 திட்டத்தின் வாயிலாகத் தினசரி 40 கோடி முதல் 50 கோடி லிட்டர் வரையிலான
நீரை விநியோகிக்க முடியும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.

சுங்கை ராசாவ் நீர் சுத்திகரிப்பு மையத்தின் கட்டுமானப்பணிகள் அடுத்தாண்டு அல்லது 2022 இல் முற்று பெறும் எனக் கூறிய அவர், நீர் விநியோகத் தடை ஏற்படும் பட்சத்தில்
கிள்ளான் வட்டார மக்களுக்கு இம்மையத்தின் மூலம் நீரை விநியோகிக்க முடியும் என்று
அவர் கூறினார்.

ஆண்டுடொன்றுக்கு 150 கிலோமீட்டர் நீளத்திற்குக் குழாய்களை மாற்றும் திட்டத்தை
மேற்கொள்வதன் வாயிலாகக் குழாய் உடைப்பின் காரணமாக வீணாகும் நீரின் அளவை
குறைக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :