SELANGOR

பொது முடக்க நெருக்கடியிலிருந்து மீள வணிகர்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள்

ஷா ஆலம், செப் 6- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காரணமாக ஏற்பட்ட
நெருக்கடியிலிருந்து வணிகர்கள் மீள்வதற்கு ஏதுவாகப் பரிவுமிக்க சிலாங்கூர்
பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

லைசென்ஸ் பெற்ற அங்காடி வியாபாரிகளுக்கான உதவித் திட்டத்திற்கு 4 கோடி வெள்ளி,
வணிக மையத்திற்கான வாடகை விலக்களிப்புக்கு 1.2 கோடி வெள்ளி, ஹிஜ்ரா கடனைத்
திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்காக 7 கோடி வெள்ளி, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் துறையினருக்கான ரொக்க உதவித் திட்டமான சிலாங்கூர் அட்வான்ஸ்
திட்டத்திற்கு 10 கோடி வெள்ளி உள்ளிட்ட திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி  உள்ளதாகத் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

கிராமப்புறத் தொழில்முனைவோர் இணையம் வாயிலாகத் தங்கள் பொருள்களை
வாங்கவும் விற்கவும் வகை செய்யும் செல்டெக் திட்டத்தையும் தாங்கள்  அமல்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு மட்டுமின்றித் தொழில் முனைவோருக்குத் தேவையான பயிற்சிகளை இணையம்
வாயிலாகவும் நடத்தி வருகிறோம் என்று சிலாங்கூர் கினிக்கு அளித்த நேர்காணலில் அவர்
தெரிவித்தார்.

இலக்காகக் கொள்ளப்பட்ட தரப்பினருக்குப் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை
அமல்படுத்தப்பட்ட மூன்றாவது நாளிலே உதவித் திட்டங்களை அறிவித்த மாநிலம்
சிலாங்கூர் ஆகும் என்றும் ரோட்சியா சொன்னார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரின் நலனுக்காகக் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி 12 கோடியே 78
லட்சம் வெள்ளி மதிப்பிலான உதவித் திட்டங்களைச் சிலாங்கூர் அரசு அறிவித்தது.


Pengarang :