NATIONALSELANGOR

ஆற்றின் கீழ்நிலை நீரை உறிஞ்சும் தொழில்நுட்பத்தின் வழி நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு

கோல லங்காட்– லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையத்தின் முதல் கட்டம்  வரும் 2022ஆம் ஆண்டுவாக்கில் நாளொன்றுக்கு 20 கோடி லிட்டர் நீரை சுத்திகரிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் கூறியது.

அந்த பணிக்குத் தேவையான கருவிகளை பொருத்தும் பணி இன்னும் முற்றுப் பெறாத தால் தற்போது நாளொன்றுக்கு ஐந்து கோடி லிட்டர் நீர் மட்டுமே  அந்த மையத்தில் சுத்திகரிக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஜமான் தெரிவித்தார்.

தற்போதுள்ள ஆற்றலைக் கொண்டு கோல லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 30,000 பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகத்தை வழங்க முடியும். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான குழாய்களைப் பொருத்தும் பணிகள் வரும் 2022ஆம் ஆண்டுவாக்கில் முற்றுப் பெறும் என்றார் அவர்.

ஆற்றின் கீழ்நிலை நீரை உறிஞ்சும் புதிய தொழில்நுட்பத்தை இந்த இந்த சுத்திகரிப்பு மையம் பயன்படுத்தும் என்றத் தகவலையும் சுஹாய்மி வெளியிட்டார்.

இந்த தொழில்நுட்பம் லாபு மற்றும் செமினி 2 நீர் சுத்திகரிப்பு மையங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் எண்பதாம் ஆண்டுகளின்  தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்தி வந்தோம். இந்த தொழில்நுட்பம் நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள ஆறுகளிலிருந்து நீரை எடுத்து சுத்திகரிப்பதை மையமாக கொண்டது என அவர் தெளிவுபடுத்தினார்.

பந்திங்கில் உள்ள லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையத்தை கடந்த மாதம் 28ஆம் தேதி பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுமார் 37 கோடி வெள்ளி செலவிலான இந்த சுத்திகரிப்பு மையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் முற்றுப்பெற்றது.

இந்த மையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணிப்பு பணிகள் வரும் 2026ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் மூலம் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 40 கோடி லிட்டராக அதிகரிக்கும் எனவும் அவர் சுஹாய்மி குறிப்பிட்டார்.


Pengarang :