SELANGOR

சிலாங்கூர் மக்களுக்கு மீண்டும் ”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம்

ஷா ஆலம்,செப் 10 – சிலாங்கூர் ”கிஸ் ”எனப்படும் பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டத்திற்குக் கடந்த நவம்பர் மாதம் 1ந்தேதி டத்தோ மந்திரி புசார் அதிக ஒதுக்கீடுகளை அறிவித்தார்.  அதன்படி ரிங்கிட் 1.2  கோடியிலிருந்து 6.2கோடியாக  உயர்வளித்துள்ளார். இதன்வழி மேலும் 25000 குடும்பங்கள்  பயனடைய வேண்டும் என்பதே அதன் நோக்கம். இத்திட்டம், 2017 ல் ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதில் 50 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்தன.

அதிக மானிய ஒதுக்கீடும் பெயர் பட்டியல் சீரமைப்பும் உதவி தேவைப்படும் மேலும் பல குடும்பங்களுக்குப் பயனளிக்கும் என்றார் மகளிர் மேம்பாட்டுக்குப் பொறுப்பான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சித்தி மரியா மாமுட்.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றவர்களின் பட்டியல் மறு பரிசீலனை செய்வது உண்மையாக உதவிகள் தேவைப்படும் பிரிவினர் பயனடைவதை உறுதி படுத்துவதற்காகும் என்றார் அவர்.

பட்டியல் மறுபரிசீலனை என்பது உதவி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைப்பதனை நோக்கமாகக் கொண்டதல்ல, மாநிலத்தின் பல  உதவி திட்டங்களில் உதவிகளைப் பெறுவோர் தொடர்ந்து  இதிலும் பயனடைந்து வரும் வேளையில்,  எந்த உதவியும் கிடைக்காமல் அவதி படுவோரை அடையாளங்கண்டு அவர்களுக்கும் உதவும் நோக்கம் கொண்டது.

அதே வேளையில் இத்திட்டத்தின் வழி முன்பு உதவிபெற்ற சிலரின் வாழ்க்கை நிலை மேம்பட்டிருக்கலாம்,  ஆக வாழ்வில் உயர்ந்து, வறுமைக் கோட்டிலிருந்து விடு பட்டவர்கள் மற்றவர்களுக்கு  வாய்ப்பு வழங்க  இது போன்ற ஆய்வுகளும் , மறுசீரமைப்புகளும் அவசியமாகிறது என்றார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சித்தி மரியா மாமுட்.


Pengarang :