SELANGOR

நகராண்மைக்கழக அந்தஸ்து பெற்றது கோல லங்காட் மாவட்ட மன்றம்

பந்திங், செப் 10- கோல லங்காட் மாவட்ட மன்றம் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஆசியுடன் நகராண்மைக்கழக அந்தஸ்தைப் பெற்றது.

இங்குள்ள டேவான் ஸ்ரீ ஜூக்ரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வுக்குச் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.  கோல  லங்காட் நகராண்மைக்கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான் முகமது ரஹிம்  இந்நிகழ்வில் உடனிருந்தார்.

மாவட்ட மன்றத்தை நகராண்மைக் கழகமாக்கும் நடவடிக்கைகள் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், கடந்த மார்ச் மாதம் இதற்கான அந்தஸ்து கிடைத்தாகவும் டத்தோ அமிருள் தமது உரையில் குறிப்பிட்டார்.

கோல லங்காட் மாவட்ட மன்றத்தை நகராண்மைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தும் திட்டம் கடும் உழைப்புக்குப் பின்னரே சாத்தியமானது. இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாநில அரசையும் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சையும் இணங்கச் செய்வதற்குப் பல ஆண்டுகாலம் பிடித்தது என்றார் அவர்.

கோல லங்காட் மாவட்ட மன்றம் நகராண்மைக்கழக அந்தஸ்தைப் பெற்றதைத் தொடர்ந்து  வசீகரம், நல்லிணக்கம் மற்றும் விவேகம் என்ற சுலோகமும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட புதிய சின்னமும் அறிமுகம் செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய அந்தஸ்தின் வாயிலாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, சுற்றுலா மையங்களை மேம்படுத்துவது மற்றும் வரலாற்று இடங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்  கூறினார்.

 


Pengarang :