NATIONALSELANGOR

அடையாளக் கார்டை மாற்றும் திட்டமில்லை மத்திய அரசு அறிவிப்பு

கோலாலம்பூர், செப் 10 – மைகாட்  எனப்படும் அடையாள அட்டையை மாற்றும் திட்டத்தைத் தாங்கள் கொண்டிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.

தற்போதுள்ள மைகாட்  தரமிக்கதாகவும் மற்றும் அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் உள்ளதால் அதற்குப் பதிலாகப் புதிய அடையாள அட்டையை அறிமுகம் செய்யத் தாங்கள் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று துணை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் முகமது சைட் கூறினார்.

எனினும், எதிர்காலத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில்  அடையாள அட்டையை  மாற்றுவது தொடர்பிலான ஆய்வுகளையும் கருத்துகளையும் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடமிருந்து பெறத் தாங்கள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள மைகாட் பாலிகார்பனெட் மூலம் தயாரிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களில் இதன் தாங்கும் சக்தி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. மேலும் தகவல்களைப் பதிவு செய்யும்  வில்லைகள் பல்வேறு கட்டச் சோதனைகளுக்குப் பின்னரே அந்த அட்டையில் சேர்க்கப்பட்டன என்றார் அவர்.

இது தவிர, பெயர், அடையாளக் கார்டு எண்கள் மற்றும் சிறிய புகைப்படம் ஆகியவை  மீது காணப்படும் லேசர் எழுத்துகள் அந்த அட்டையிலுள்ள தகவல்கள் மாற்றப்படுவதைத் தடுக்கும் என்பதோடு அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் விரைவாகக் கண்டு பிடித்து விடும் என்றும் அவர் சொன்னார்.

மேலவையில் இன்று செனட்டர் டத்தோஸ்ரீ முகமது அலி முகமது எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது துணையமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

நடப்பிலுள்ள அடையாள அட்டைகளுக்குப் பதிலாகத் தரமான மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட அடையாள அட்டைகளை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் கால அவகாசம் எதனையும்  கொண்டுள்ளதா என்று செனட்டர் முகமது கேள்வியெழுப்பியிருந்தார்.

1990ஆம் ஆண்டு தேசியப் பதிவுத் துறை விதிகள் 6இல் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி பொதுமக்கள்  அடையாள அட்டைகளைத் தங்கள் பாதுகாப்பில் எப்போதும் பத்திரமாக  வைத்திருக்க வேண்டும் என்றும்  துணையமைச்சர் வலியுறுத்தினார்.

அந்த 6ஆம் விதியை  மீறுவோர்  விதி 25(என்) கீழ் குற்றஞ்சாட்டப்படுவர். குற்றவாளி என  நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 20,000 வெள்ளி அபராதம் அல்லது கூடுதல் பட்சம் மூன்றாண்டுச் சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றார் அவர்.

 

 


Pengarang :