NATIONAL

“கேங் கே.டி.எம்.” மோட்டார் சைக்கிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு

செர்டாங், செப் 10-  கடந்த  2013ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல் பட்டு வந்த கே.டி.எம். ரக மோட்டார் சைக்கிள் திருடடுக் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

மூன்று மாநிலங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் அக்கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட எட்டு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இஸ்மாயில் புர்ஹான் கூறினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 29 முதல் 42 வயது வரையிலான அந்த எண்மரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

புக்கிட் ஜாலில் மக்கள் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் வெள்ளி மதிப்புள்ள எட்டு திருட்டுக் மோட்டார் சைக்கிள்களை தாங்கள் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில்  கடந்த 2013ஆம் ஆண்டு  முதல் செயல்பட்டு வந்த அக்கும்பல் இதுவரை சுமார் நூறு மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளது, தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

கே.டி.எம். ரக மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களுக்கு விலை அதிகம் என்பதால் அக்கும்பல் அந்த ரக மோட்டார் சைக்கிள்களையே அதிகம் திருடி வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிள்களை திருடுவதற்கு இக்கும்பல் பல்வேறு தந்திரங்களை கையாளுவது வழக்கம் என்றும்   சில சமயங்களில் கைவிலங்கு மற்றும் போலித் துப்பாக்கி ஏந்தி போலீஸ்காரர்கள் போல் வேடமிடுவதும் உண்டு என்றும் அவர் கூறினார்.

 


Pengarang :