NATIONALSELANGOR

விரயமாகும் நீரின் அளவு 28.1 விழுக்காடாக குறைந்தது சிலாங்கூர் மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், செப் 10- வாடிக்கையாளர்களைச் சேர்வதற்கு முன்னரே விரயமாகும் நீரின் அளவை சிலாங்கூர் அரசாங்கம் 28.1 விழுக்காடாக குறைத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கடந்த ஆகஸ்டு மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்த அளவு பதிவானதாக குறிப்பிட்ட அவர், கடந்த 2008ஆம் ஆண்டில் விரயமாகும் நீரின் அளவு 36 விழுக்காடாக இருந்ததாகச் சொன்னார்.

புஞ்சா நியாகா, ஷபாஸ், அபாஸ், ஸ்ப்லாஷ், கே.ஏ.எஸ்.பி. ஆகிய நிறுவனங்களை ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் கொள்முதல் செய்ததைத் தொடர்ந்து இந்த வெற்றி சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டார்.

முன்பு நீரை சுத்திகரிப்பதற்கு, நீரை விநியோகிப்பதற்கு, நீர் கட்டணங்களை வசூலிப்பதற்கு என தனித்தனி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இருந்த போதிலும் அந்த நிறுவனங்களால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை என்றார் அவர்.

அனைத்து நிறுவனங்களையும் இப்போது ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விட்டோம். இதன் வழி அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க முடியும் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த நிறுவன இணைப்பின் வாயிலாக செமினி மற்றும் லபோஹான் டகாங் நீர் சுத்திகரிப்பு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட நிர்மாணிப்புக்கும்  தயாராகி விட்டோம் என அவர் தெரிவித்தார்.

 

 

 


Pengarang :