NATIONAL

கடல் பெருக்கு அபாயம் விழிப்பு நிலையில் எம்.பி கே.

ஷா ஆலம், செப் 14- கடல் பெருக்கு காரணமாக கிள்ளான் மாவட்டத்தில் உள்ள 11 இடங்கள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ள வேளையில் அந்த இயற்கை பேரிடரை எதிர் கொள்ள கிள்ளான் நகராண்மைக் கழகம் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் இரு குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக நகராண்மைக் கழகத்தின் துணை அமலாக்க பிரிவு இயக்குநர் ஷாருள் அஸ்ரி அப்துல் மஜீத் கூறினார்.

இந்த கடல் பெருக்கு காரணமாக கம்போங் தோக் மூடா, சுங்கை பினாங் பூலாவ் இண்டா, பண்டமாரான், கிள்ளான் துறைமுகம், கம்போங் சுங்கை செர்டாங், செமென்தா,சுங்கை கிராமாட், கம்போங் பிரம்பாட்,  வட துறைமுகம், தெலுக் கோங், பூலாவ் கித்தாம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த பேரிடரை சமாளிக்க நான்கு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், உதவி தேவைப்படுவோர் 03- 33716700 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இந்த கடல் பெருக்கு இம்மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளிலும் அடுத்த மாதம் 17 முதல் 19ஆம் தேதி வரையிலும் நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆம் தேதிகளிலும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடல் பெருக்கின் போது 5.8 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயரும்.

 


Pengarang :