SELANGOR

மாநில அரசின் வருமானத்தை பெருக்க சுற்றுலா துறைக்கு ஊக்குவிப்பு

ஷா ஆலம், செப் 14- வருமானத்தை பெருக்குவதற்காக டூரிசம் சிலாங்கூர் எனப்படும்  சுற்றுலா மேம்பாட்டுத் துறை சுற்றுலா ஊக்குவிப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுற்றுலா துறை தற்போது மீட்சி நிலையை நோக்கி செல்வதால் அத்துறையின் வாயிலாக வருமானத்தை ஈட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதன் பொது நிர்வாகி அஸ்ருள் ஷா முகமது  சொன்னார்.

சுற்றுலாத்துறை மூலம் கடந்தாண்டு 2 கோடியே 18 லட்சம் வெள்ளி வருமானம் கிடைத்ததாகக் கூறிய அவர், கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக   இவ்வாண்டில்  அந்த வருமானம் சற்று குறையலாம் என்றும் அவர் கூறினார்.

மாநில மற்றும் அனைத்துலக நிலையிலான விளையாட்டுகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களின் தேர்வுக்குரிய இடமாக சிலாங்கூர் விளங்குவதால் மாநிலத்தை விளையாட்டுச் சுற்றுலா மையமாக பிரபலபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஐம்பது விழுக்காடு மாநில அரசுக்கு கிடைக்கும் வேளையில் எஞ்சிய தொகை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக மத்திய அரசு இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை வரி விலக்கை அறிவித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

 

 

 


Pengarang :