NATIONAL

இயங்கலை வாயிலான மக்கள் தொகை கணக்கெடுப்பில் 18 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்பு

கோலாலம்பூர், செப் 25- இ-சென்சஸ் எனப்படும் இயங்கலை வாயிலான 2020ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பில் இதுவரை 18 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இந்த மின்னியல் முறையிலான கணக்கெடுப்பில் தாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான மலேசியர்களே தங்கள் விபரங்களைப் பதிவு செய்துள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உசீர் மாஹிடின் கூறினார்.

நாட்டிலுள்ள 3 கோடியே 27 லட்சம் மக்களில் சுமார் 30 விழுக்காட்டினர் அதாவது 90 லட்சம் பேர் இயங்கலை வாயிலாக இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்வர் எனத் தாங்கள் எதிர்பார்த்தாக அவர் சொன்னார்.

குறுகிய காலத்தில் அந்த இலக்கை அடைவது கடினமானப் பணியாக இருந்த போதிலும் வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை ஓரளவு உயர்வு காணும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இயங்கலை வாயிலான கணக்கெடுப்புக்கு ஆதரவு குறைவாக இருக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். காரணம், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவதான் கால காலமாக கடை பிடிக்கும் நடைமுறையாக இருந்து வந்தது. ஆகையால் இணையம் மூலம் நடத்தும் கணக்கெடுப்பு மக்களுக்கு அந்நியமாக உள்ளது என்றார் அவர்.

இந்த கணக்கெடுப்பில் புத்ரா ஜெயாவைச் சேர்ந்த 40 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற வேளையில் பேராக்கில் 10 விழுக்காட்டினரும் ஜோகூரில் 8 விழுக்காட்டினரும் பங்கேற்றுள்ளனர். எனினும் கிழக்குக் கரை மாநிலங்களான கிளாந்தான் மற்றும் திரங்கானுவில் 2 விழுக்காடு மட்டுமே பதிவாகியுள்ளது என்று அவர் சொன்னார்.

2020ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இயங்கலை வாயிலாகவும் அக்டோபர் 7ஆம் தேதி  தொடங்கி 24ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று நேரடியாகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.

 


Pengarang :