NATIONALSELANGOR

ஆறுகளின் பாதுகாப்பைக் கண்காணிக்க சிறப்புக் குழு

சுபாங் ஜெயா, செப் 27- சிலாங்கூரில் உள்ள ஆறுகளைப் பாதுகாக்கும் திட்டத்தை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை சிலாங்கூர் மாநில அரசாங்கம் அமைக்கவுள்ளது.

சிலாங்கூரில் உள்ள ஆறுகளை பாதுகாப்பது தொடர்பான அந்த அமலாக்க குழு லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியத்தின் வியூகங்கள் மற்றும் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதலாவது வியூகம் ஆற்றோரங்களை தரம் உயர்த்துவது, நிலச்சீராக்கப் பணிகளை மேற்கொள்வது மற்றும் தகவல் மையத்தை உருவாக்குவது ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டிருக்கும் என்று அவர் சொன்னார்.

ஆற்றின் தரம் மற்றும் ரிசர்வ் நிலங்களின் சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்வது இரண்டாவது வியூகமாகும் என்று உலக  நதிகள் தினத்தை முன்னிட்டு இங்கு நடைபெற்ற நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

ஆறுகளின் முக்கியத்துவம் மீதான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது நதிகளின் தோழர்கள் அமைப்பின் பங்கேற்பை உறுதிபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

ஆற்று நீர் மாசுபடுவதற்கு காரணமாக விளங்கக்கூடிய சம்பவங்கள் குறித்து தகவல் தருவோருக்கு வெகுமதி தருவது குறித்தும் தாங்கள் ஆராய்ந்து வருவதாக அமிருடின் சொன்னார்.

இந்நடவடிக்கையின் வாயிலாக ஆறுகள் மற்றும் நீர் வளங்களை மாசுபடுத்துவோரை மட்டுமின்றி அத்தகைய வளங்கள் மீது அக்கறை கொண்டவர்களையும் அடையாளம் காண முடியும் என்றார் அவர்.


Pengarang :