BERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

சிலாங்கூரின் நீர் வளம் 2065ஆம் ஆண்டு வரைக்கும் போதுமானது

சுபாங் ஜெயா, செப் 27- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நீர் வளம் வீடுகள் மற்றும் தொழில்துறையின் 2065ஆம் ஆண்டு வரையிலான தேவைக்கு போதுமானதாக உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஹோராஸ் மற்றும் சுங்கை ராசாவ் திட்டங்களின் வாயிலாக நீர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவாதம் வழங்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

(மழை காலங்களில் சுங்கை சிலாங்கூர் ஆற்றில் நிரம்பி வழியும் உபரி நீரை பயன்படுத்தப்படாத ஈயக்குட்டைகளில் சேமித்து வைத்து வறட்சி காலத்தில் பயன்படுத்தும் முறையே ஹோராஸ் என அழைக்கப்படுகிறது. இந்த முறையின் கீழ நாளொன்றுக்கு 30 கோடி லிட்டர் நீரை உற்பத்தி செய்ய முடியும்.இந்த நீர் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள மக்களின் 100 நாள் தேவைக்கு போதுமானதாகும்.)

நீர் வளம், விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்பு மீதான ஆய்வின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்படுவதாக அமிருடின் தெரிவித்தார்.

இன்று அனுசரிக்கப்படும் உலக நதிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுக்கு வழங்கிய உரையில் மந்திரி புசார் இதனைக் கூறினார். அவரது உரையை அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் வாசித்தார்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்த காரணத்தால் கடந்த ஆகஸ்டு வரை அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின்  அளவு 95 விழுக்காட்டை எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக மழை இல்லாத போதும் நீர் சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்புவதற்கு போதுமான நீரை அந்த நீர்த்தேக்கங்கள் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

மக்களின் தேவைக்கு போதுமான நீர் நம் வசம் உள்ளது. எனினும் அண்மையில் ஏற்பட்டதைப் போல் நீர் மாசுபடுவது போன்ற காரணங்களால் மக்களுக்கு சுத்தமான நீரை விநியோகிப்பதில் இடையூறு ஏற்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :