எம்.பி.எஸ்.ஏ. ஏற்பாட்டில்  60 குழந்தைகளுக்கு ஹெம்பர் அன்பளிப்பு

ஷா ஆலம், அக் 12- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 21 ஆம் ஆண்டு நிறைவையொட்டி மாநகரிலுள்ள மருத்துவமனைகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த 60 குழந்தைகளுக்கு ஹெம்பர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய அந்த ஹெம்பர்கள் தலா 150 வெள்ளி மதிப்பைக்  கொண்டவையாகும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்பு பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

மாநகர் மன்றத்தின் 21 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அக்டோபர் 10 ஆம் தேதி மாநகர் மன்றத்திற்கு பொருள் பொதிந்த ஒரு தினமாகும். அன்றுதான் நகராண்மைக் கழக அந்தஸ்திலிருந்து மாநகர் மன்றமாக இந்த ஊராட்சி மன்றம் தரம் உயர்த்தப்பட்டது என்றார் அவர்.

ஷா ஆலம் மருத்துவமனைக்கு 30 ஹெம்பர்களும் அவிஷேனா மருத்துவ மையம், கே.பி.ஜே. மருத்துவமனை, உம்ரா மருத்துவமனை அகியவற்றுக்கு தலா 10 ஹெம்பர்களும் வழங்கப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த 21 ஆம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி அபராதக் கட்டணக் கழிவு, ஷா ஆலம்  நூலகத்திற்கு இலவச அங்கத்துவ சலுகை, மின் ஸ்கூட்டரை முதல் ஐந்து நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஆகிய சலுகைகள் இம்மாதம் வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :