ரவாங், சுங்கை கோங் பகுதியில் வெள்ள நீர் சேகரிப்பு குளம் நிர்மாணிப்பு

ஷா ஆலம், டிச 2- வெள்ளம் மற்றும் தூய்மைக்கேட்டைத் தடுக்க ரவாங், சுங்கை கோங்கில் வெள்ள நீர் சேகரிப்பு குளம் நிர்மாணிக்கப்படுகிறது. 

வரும் 2023 ஆம் ஆண்டு முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் வாயிலாக ரவாங் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 100,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்தாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். சிலாங்கூர் அரசின் 2022 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 1.5 கோடி வெள்ளி கூடுதல் நிதி ஒதுக்கீடு இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்பு ஒரு சமயத்தில் நீர் விநியோகத் தடைக்கு காரணமாக இருந்த சுங்கை கோங் ஆற்றில் மாசுபாடு மற்றும் வெள்ளப் பிரச்சனையை தடுப்பதில் நீர் சேகரிப்பு குளத்தை விரிவாக்கம் செய்வது மற்றும் அதன் பயன்பாட்டை அதிகப்படுத்துவது ஆகிய பணிகள் முக்கியப் பங்கினை ஆற்றும் என்றார் அவர்.

இந்த கூடுதல் ஒதுக்கீட்டின் வழி இத்திட்டம் சீராக மேற்கொள்ளப்படும் என்பதோடு நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளில் ஏற்படும் வெள்ளப் பிரச்னைக்கும் தீர்வு காண்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் முழுமையாக முற்றுப் பெறாத போதிலும் இப்போதே இத்திட்டத்தின் பலனை காண முடிகிறது. கடந்த ஆண்டுகளை விட தற்போது வெள்ளம் குறைந்து காணப்படுவதே அதற்கு ஒரு சான்றாகும் என்றார் அவர்.

 


Pengarang :