SELANGOR

செப்டம்பர் 30 வரை ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையை 44.5 லட்சம் பேர் பயன்படுத்தினர்

ஷா ஆலம், நவ 30- கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர்
அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளும் திறக்கப்பட்டதைத்
தொடர்ந்து ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவையைப்
பயன்டுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 44 லட்சத்து 50 ஆயிரம் பேர்
இந்த பஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்தாண்டின் இதே
காலக்கட்டத்தில் 43 லட்சத்து 10 ஆயிரம் பேர் மட்டுமே இச்சேவையைப்
பெற்றிருந்தனர்.

வேலைக்குச் செல்வோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்
போக்குவரத்துக்குச் செலவிடும் தொகையைக் குறைக்கும் நோக்கில் மாநில
அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்த ஸ்மார்ட் சிலாங்கூர்
பஸ் சேவைத் திட்டமும் அடங்கும் என்று போக்குவரத்து துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவையின் அடைவு நிலை குறித்து மாநிலச்
சட்டமன்றத்தில் இன்று சிஜங்காங் உறுப்பினர் டத்தோ டாக்டர் யூனுஸ்
ஹைரி எழுப்பியக் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

பொது மக்கள் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின்
சுமையைக் குறைப்பதற்கான புதிய திட்டங்களின் அமலாக்கம் குறித்தும்
மாநில அரசு ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ் சேவை உள்நாட்டினருக்கு
இலவசமாகவும் வெளிநாட்டினருக்கு 90 காசு கட்டணத்திலும்
வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் 15ஆம் தேதி தொடங்கி செபாட்
எனப்படும் சிட்டிஸன் மின்- கட்டண செயலி மூலம் இதற்கான கட்டணம்
வசூலிக்கப்படுகிறது.

மாநிலத்தின் போக்குவரத்து முறையின் வடிவமைப்பை மாற்றும்
வகையில் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் டிரான்சிட் வேன் எனப்படும்
வழிமாற்று சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கடந்த வாரம் மாநில சட்டமன்றத்தில் 2023 ஆம்
ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது
கூறியிருந்தார்.


Pengarang :