NATIONAL

வெறுப்புணர்வைத்  தூண்டும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அமானா கட்சி போலீசில் புகார்

கோலாலம்பூர், நவ 30- சமூகங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான அறிக்கைகளை  வெளியிட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக பக்கத்தான் ஹராப்பான் மற்றும் மூடா கட்சித் தலைவர்களுடன் இணைந்து அமானா கட்சி பொறுப்பாளர்கள் இன்று போலீசில் புகார் செய்தனர்.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான அறிக்கைகள் வெளியிடப்பட்டது தொடர்பில் தாம் நான்கு புகார்களைச் செய்துள்ளதாக அமானா கட்சியின் அணி திரட்டுப் பிரிவின் இயக்குநர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

இனவாதம், வெறுப்புணர்வு அரசியல், மதவாத அரசியல், ஒருவரை மற்றவர் சிறுமைப்படுத்தும் அரசியலை நிராகரிக்கும்படி அனைத்து மலேசியர்களையும்  தாம் கேட்டுக் கொள்வதாக கோல லங்காட் நாடளுமன்ற உறுப்பினரும் தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகார்  செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, ஈராண்டுகளுக்கு முன்னர் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் போது 50,000 கோடி வெள்ளி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலின் போது சமய மற்றும் இன விவகாரங்களை எழுப்பிய தரப்பினருக்கு எதிராக கடந்த சனிக்கிழமை  போலீசில் புகார் செய்த ஹம்சான் சானி, இவ்விவாகரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.


Pengarang :